வேங்கையின் மைந்தன்: கோவிட் சமயத்தில் ஒரு மறுவாசிப்பு



முக்கால் வாசி சிநேகிதம் ரயில் சிநேகிதம்தான், எங்கோ ஆரம்பித்து ஏதோ ஒரு இடத்தில் நமக்குத் தெரியாமலேயே மறைந்து போய்விடுகிறது. உறவுகள் கூட தொடருவதில்லை. காலப் பயணத்தில் எல்லாமே ஏதோ ஒரு ஜங்க்ஷனில், என்ஜினிலிருந்து கழட்டி விடப்பட்ட பெட்டிகளாகப் பிரிந்து போகிறது. 30-32 ஆண்டுகள் கழித்து 'வேங்கையின் மைந்தன்' படிக்கத் துவங்கும் போது தொலைந்து போன நட்புகளும், இழந்த நாட்களின் சுமையும் வந்து தாக்குகிறது. சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் சூழத்தான் வளர்ந்தேன், அமர் சித்ரா கதாவிலிருந்து, கல்கி, விகடன், மஞ்சரி, அம்புலிமாமா என்று எதெது கிடைத்ததோ அத்தனையும் படிப்பேன். வீட்டில் பைண்டு செய்து வைக்கப்பட்டிருந்த சிவகாமியின் சபதம், நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு கல்கி மீண்டும் வெளி வர ஆரம்பித்தபொழுது கல்கியின் magnum opus 'பொன்னியின் செல்வன்' தொடர் வர ஆரம்பித்தது. பாட்டி ஏற்கனவே படித்திருந்தாலும் மறுபடியும் படித்தாள், நானும் அவளுடன் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அது ஒரு பிரமிப்பான உலகம். வந்தியத் தேவனும், காவிரியும் கண் முன் விரிந்து பரந்தார்கள். நந்தினி புரியாத புதிராகவே இருந்தாள், இதையெல்லாம் நானும், பாட்டியும் விவாதித்துக்கொண்டே படிப்போம். இந்த இரண்டு வரலாற்று நாவல்கள் தவிர அந்த சமயம் 'ரங்கநாயகி' என்றொரு சரித்திரத் தொடரும் பாட்டியுடன் படித்த ஞாபகம், ஆசிரியர் வேணுகோபாலனா, தெரியவில்லை. நானும் இணையத்தில் தேடிப் பார்த்து விட்டேன், கிடைக்கவில்லை. ஆனால், கதையின் கருவும், அந்த ஸ்ரீரங்கப்பட்டினம் கோவில் படங்களும் இன்றும் நினைவில் இருக்கிறது.

திப்புவின் காதலி ரங்கநாயகி, அவளுக்காகவே ஸ்ரீரங்கப்பட்டினம் கோவிலை அவன் பராமரிக்கிறான். பல போர்கள் நடுவே தொடரும் அவர்களுடைய காதல்தான் ரங்கநாயகி கதை. அதற்கப்புறம் பிரபஞ்சனின் 'வானம் வசப்படும்' வாசித்த ஞாபகம். கல்லூரி நாட்களில் தமிழ் படிப்பது குறைந்ததோ, ஆங்கில இலக்கிய பாடச் சுமை தவிர வேறொரு காரணமும் இருந்திருக்காது. வரலாற்று நாவல்கள் மீதும் கவனம் செல்லவில்லை. அந்த சமயத்தில்தான் சரித்த நாவல்களை மட்டுமே, வெறியாக என்று கூட சொல்லலாம், படிக்கும் ஒரு நட்பு கிடைத்தது. மீண்டும் அந்தப் பக்கம் போகும் எண்ணம் இல்லாவிட்டாலும், அவனுக்காகவே 'வேங்கையின் மைந்தன்' மட்டும் படித்தேன், அதுவும் எப்போது ...

முதுகலை இரண்டாம் ஆண்டு என்று நினைக்கிறேன், அப்போது புதுக்கோட்டையில் ஒரு கல்யாணத்திற்காக நாங்கள் புறப்பட்டோம். நான் அதில் சேர்ந்து கொண்டதற்கு முக்கிய காரணம், சித்தன்னவாசல் பார்க்க வேண்டும் என்பதே. கல்யாணத்திற்கு முதல் நாளே புதுக்கோட்டையிலிருந்து ஒரு பஸ் பிடித்து சித்தன்னவாசல் ஸ்டாப்பில் இறங்கினோம். அங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் நடந்ததாக நியாபகம். எத்தனோயோ கனவுடன் சித்தன்ன வாசல் சென்ற எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. குகை நுழைவாயிலில் ஒரு இரும்பு வளைக்கதவும், அதில் ஒரு சிறிய பூட்டும் தொங்கிக்கொண்டிருந்தது. சுற்றுவட்டாரத்தில் ஒரு ஆள் நடமாட்டமோ, வீடுகளோ ஒன்றும் இல்லை. பின் பக்கம் இருந்த "சமணர் படுக்கையறையை" ஏறி அங்கிருந்து சுற்றுவட்டாரத்தை ஒரு பார்வையிட்டு கல்யாண வீட்டிற்குத் திரும்பினோம். மற்றாநாள் கல்யாணம் முடிந்து தஞ்சாவூர் போனால் என்ன என்ற ஆர்வம் எழுந்தது. நம் வரலாற்று நாவல் ஆர்வலரோ, கூடவே கங்கை கொண்ட சோழபுரமும் போக வேண்டும் என்றார். யாருக்கும் பெரிசாக பயண அனுபவம் ஒன்றும் கிடையாது. அந்த ஐந்து பேர் நடுவில் நானே பெரிய அனுபவசாலி. தட்டுத் தடுமாறி தஞ்சாவூர் போய், அங்கிருந்தே ராத்திரி மெட்ராஸ் போக பேருந்தில் ஐந்து ஸீட் ரிசெர்வ் செய்து விட்டு, நீண்டு நெடுக ஒரு பயணமாக, கும்பகோணம், அங்கிருந்து கங்கை கொண்ட சோழபுரம் போய் சேர்ந்தோம். தஞ்சாவூரைக் கண்ட பிரமிப்பை விட சோழபுரத்தின் அழகில் மாய்ந்தோம். ஆளரவமற்ற குக்கிராமமாக இருந்தது அன்றய சோழபுரம். என்னிடம் இருந்த ஒரு சிறிய கேமரா, அந்த சமயம் பார்த்து பாட்டரி இறங்கி முடங்கியது. சுற்று முற்றும் பார்த்தால் எங்கும் ஒரு கடை இருப்பதற்கான அறிகுறி கூட இல்லை. மீண்டும் ஒரு ஏமாற்றம், அய்யோ ஒரு படம் கூட எடுக்க முடியவில்லையே என்று. ஆனாலும், ஓரொரு கல்லாக, சிற்பமாக சோழபுரத்தை ரசித்தோம். அந்த வளாகத்திலேயே நாங்கள் ஐந்து பேர் மட்டும்தான் இருந்தோம். வரலாற்று நாவல் பித்து எங்களுக்கு அகிலனின் 'வேங்கையின் மைந்தன்' சோழபுரத்தை வர்ணிக்கும் அழகை சொல்லி ரொம்பவும் சிலாகித்து. எங்களையும் அந்த அழகில் மயங்கவைத்தார். இராஜ இராஜன் கட்டிய மகத்தான கோவிலை விட அவன் மைந்தன் இராஜேந்திரன் கட்டிய சோழபுரம் எங்கள் நெஞ்சில் நிறைந்தது. அந்த சுவை இன்றளவும் மறக்க முடியாதது. இந்திய முழுவதும் உள்ள அனைத்து யுனெஸ்கோ பட்டியலில் இருக்கும் வரலாற்று சின்னங்களை, அபாரமான கோவில்களை  பார்த்து இருந்தாலும், அன்று அந்த கங்கை கொண்ட சோழபுரம் சென்ற மகிழ்ச்சிக்கு ஈடு இணையாகாது. செய்ய முடியாத ஒன்றை, பார்க்க முடியாத ஒன்றை பார்த்துவிட்டதை போல் ஒரு உணர்வு. மஹாபலிபுரமும், காஞ்சியும் ஏதோ எங்கள் உயிருடனே கலந்த ஒன்றாக இருந்தது போலவும், தஞ்சாவூரும், சோழபுரமும் எட்டாத ஒன்று போல இருந்தது. அன்று அந்த சோழபுரம் கண்டு வந்தவுடன், அடுத்த நாளே 'வேங்கையின் மைந்தன்' படித்தேன்.

சிவகாமியின் சபதம் படித்து, அன்றிலிருந்து இன்று வரை, மல்லையை என் மனம் நிறைத்த உவகையை, மறக்க முடியவில்லை. ஆயன சிற்பி அளவிற்கு திருச்சிற்றம்பல சிற்பியார் கதாபாத்திரம் இல்லாவிட்டாலும், அவரின் படைப்பு பல்லவ அழகிற்கு இணையாக உள்ளம் கொள்ளை கொண்டிருக்கிறது.

மல்லையிலிருந்து தொடங்கிய என்னுடைய பயணம், காஜுராஹோவில் முடிந்தது. முடிந்ததா, அது ஒரு தொடர்கதை அல்லவா ... அதற்குப் பின்னர் குவாலியரும், பதேஸ்வரும் என்று தொடர்ந்தது. ஆனால் அனைத்திற்கும் ஆர்வம் என்ற வித்து ஒரு சிறிய வாசிப்பு, ஒரு சிறிய நட்பு, ஒரு சிறிய சொந்தம், அங்கிருந்து ஆரம்பித்ததுதான். கடைசியாக சோழபுரம் சென்றபோது அப்பா இருந்தார், அதுவே அவருடன் செய்த கடைசி பயணம் என்று நினைக்கிறேன். நடக்கவும் முடியாமல் சோர்வுற்று புல் தரையிலேயே அமர்ந்து விட்டார். இன்று 'வேங்கையின் மைந்தன்' மீண்டும் வாசிக்கிறேன். என்னுடன் சோழபுரம் சென்றவர்கள் யாரும் இன்று என்னுடன் இல்லை, அப்பா வைகுண்டவாசியாகி விட்டார், மற்றவர்கள் தொடர்பில்லை. சில நட்புகள் நீடிக்கிறது, சிலது காலத்தால் மறைந்து போன கங்கை கொண்டானின் தலைநகரம் போன்றே மறைந்து விட்டது. இதை முடிக்கும் முன்பு ஒரு சிறு digression. அதுவும் கதைக் கலனிற்கு தொடர்புடையதே.



இந்திய வரலாறு மற்றும் மதங்களின் மேல் பரவலாக எழுதும் ஒரு வெளிநாட்டு அம்மையார், நம்முடைய அரசர்கள் எல்லாம் தங்களின் "megalomania", கர்வத்தின் வெளிப்பாடாகவே மாபெரும் கற்றளிகளை  எழுப்பியதாக எழுதினார். அங்குதான் கல்கியும், அகிலனும் படிக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தேன். அவர்கள் வரலாற்று ஆசிரியர்கள் அல்ல, வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட புனைவுகளை பதிவிட்டவர்கள்தான். ஆனால் அவர்கள் ஏற்படுத்திய  அந்த மன்னர்களின் உருவகம், அவர்களின் புரிதலை வெளிப்படுத்துகிறது. அந்த புரிதல் நமக்கு ஒரு சிறு பாடமாகவும் இருக்க வேண்டிய அவசியமிருக்கிறது. அகிலனைப் படித்து பின்பு டோனிகெர் படித்தால், இராஜ இராஜனையும், கிருஷ்ண தேவராயனையும் meglomanic என்று எடுத்த எடுப்பிலேயே சொல்லாமல், அவர்கள் கட்டிய கோவில்களும், அதற்குப் பின் இருக்கும் நுணுக்கங்களும்  புரியும்.



அகிலன் சோழபுரம் உருவாக்க திட்டத்தைப் பற்றி எழுதும்போது குடுத்த பின்குறிப்பும், கங்கை கொண்டானுக்கும், திருச்சிற்றம்பல சிற்பியாருக்கும் இடையே நடந்த உரையாடல்களும் இங்கே:

"சிற்பியாரோ! இவையனைத்தும் புதுமையாக தோன்றுகின்றனவே." என்று பதற்றத்தோடு வினவினார் சக்ரவர்த்தி.

"சக்கரவர்த்திகாள்! கடல் கடந்த யவனம் போன்ற மேலை நாடுகளில் மன்னர்களுடைய அரண்மனைகள் பல, கற்களால் அமைக்கப் பெற்றிருப்பதாக கேள்வியுற்றேன். மன்னர்கள் புகழுடம்பெழுதிய பிறகு கூட அவ்வுடல்களுக்காக மிகப் பெரிய மாளிகைகள் எழுப்புகிறார்களாம். அங்கெல்லாம் அப்படியிருக்கும்போது அரண்மனைகள் மட்டிலுமாவது கருங்கல் மதில்களுக்கிடையே எழுப்பலாம் என்று நினைத்தேன்."

"கூடாது சிற்பியரே கூடாது" என்று பரபரப்போடு கூறினார் சக்ரவர்த்தி. "இறைவன் இட்ட காவலர்களாக கடமையாற்றி வந்திருக்கிறோம் இறைவனின் உறைவிடங்கள் மாத்திரமே இந்த நாட்டில் என்றென்றும் நிலைத்து நிற்கக் கூடியவையாக இருக்கவேண்டும். மன்னர்களென்றாலும் நாங்கள் மனிதர்கள்! முடிசூடிய மன்னராயினும் முடிவில் பிடி சாம்பலாகக் கூடிய சரீரம்தான் எங்களுக்கும் இருக்கிறது. இதை மறந்து விடக்கூடாது சிற்பியாரே. உறுதியானக் கற்றளியும் உயரமான கோபுரங்களும் இறைவனுக்கே உரியவை. அவனுக்கு சரிசமமாக எங்களை ஏற்றிவைக்க ஒருபோதும் முயலாதீர்கள்."

அகிலனின் பின்குறிப்பு: கங்காபுரிக் கோநகரம் சீரும் சிறப்புமுற்று விளங்கியதற்கான முதற் சின்னம் இப்பொழுது அதன் கோயில்தான்...கங்கை கொண்ட சோழபுரம் தஞ்சையின் கற்றளி ஆண்மையின் கம்பீரத்தோடு    விளங்குகிறது. உயரத்திலும் உச்சி எட்ட நிற்கிறது.


ஆனால், சிற்பக்கலையின் பெண்மை எழிலை, தாய்மை நிறைவை நாம் கங்காபுரியில்தான் காண முடியும். சிற்பச்செல்வங்களா அவை! காலனை காலால் உதைக்கத் தோன்றிய கற்கனிகள். மாமல்லபுரத்தில் தொடங்கிய அமரக்கலை கங்காபுரியில் தன் பூரண எழிலை கண்டிருக்க வேண்டும். அதனால் தான் அவற்றை மிஞ்சும் சிற்பங்கள் அதன்பிறகு உருவாகவில்லை போலும்!



 சொற்பிழைபொருட்பிழை இருப்பின் மன்னிக்கவும்.




Comments

Lalitha said…
Triggered me to read Ponniyin Selvan and Vengayin maindhan. Where will It get these books now? Tears rolled when I came across appa.

Popular posts from this blog

Elegant temple and the exotic maidens

Shyaamalaam Saralaam Susmitaam Bhuushitaam

Loss and discovery